வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் கடந்த 1992ம் ஆண்டு சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கூறி வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மலை கிராமத்தில் இருந்த 18 இளம் பெண்களை, அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 வனத்துறை அதிகாரிகள் உட்பட 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 19 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் தொடர்புடைய 54 பேர் உயிரிழந்தனர். மீதம் உள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் பத்தாண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011ம் ஆண்டு தண்டனை வழங்கியிருந்தது.

வாச்சாத்தி வழக்கு
வாச்சாத்தி வழக்கு

இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்ட நிலையில், தண்டனை பெற்றவர்கள் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார் சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும் தண்டிக்கப்பட்டவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விசுவநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளின் வயதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இதனை முற்றிலும் நிராகரித்து நீதிபதி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎப்எஸ் அதிகாரி நாதன், பாலாஜி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வரும் 6 வார காலத்திற்குள், தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in