
சேலத்தில் இரண்டாவது கணவன் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்ததால், பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்திக் கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (32) என்பவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமியும், நாகராஜனும் பிரிந்துவிட்டனர். இதனை அடுத்து ஜெயலட்சுமி மகள்களுடன் சேலம் அம்மாபேட்டையில் வசித்து வந்தார். மகள்கள் அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஜெயலட்சுமி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தபோது அங்கு பணியாற்றிய தமிழழகன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தமிழழகனும் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். எனவே இருவரும் கடந்த இரண்டு ஆண்டாக கணவன், மனைவியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழழகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து ஜெயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் போதையில் வீட்டுக்கு வந்த தமிழழகன், ஜெயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஜெயலட்சுமி திடீரென குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழழகன், ஜெயலட்சுமியை அடித்துள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி சமையல் அறையில் இருந்த காலி பீர் பாட்டிலை எடுத்து உடைத்து, தன்னைத்தானே கழுத்தில் குத்திக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தமிழழகனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.