சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு... பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சேலம் போலீஸார் நடவடிக்கை!

கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்
கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சேலம் மாநகர் போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பெண் காவலர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

இந்த வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களது காரில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்ததால், இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தேனியில் இருந்து கோவைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம், தாராபுரம் அருகே கார் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் போலீஸார் சிலரும், சவுக்கு சங்கரும் லேசான காயம் அடைந்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை சிறைக்காவலர்கள் தாக்கியதாக சங்கரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்
சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

சிறையில் உள்ள சவுக்கு சங்கரை நேரில் சந்தித்து ஆய்வு வேண்டும் என அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது, சேலம் மாநகர போலீஸார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். பெண் காவலர்கள் மற்றும் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் சேலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in