அதிர்ச்சி... பெங்களூரு காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.45 கோடி; சிபிஐ விசாரணை கோரும் பாஜக!

அதிர்ச்சி... பெங்களூரு காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.45 கோடி; சிபிஐ விசாரணை கோரும் பாஜக!

பெங்களூரு கட்டிட காண்டிராக்டர் அம்பிகாபதிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ.45 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முகாமிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்கடைகள், தொழிலதிபர்கள், காண்டிராக்டர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்களுக்கான ஒப்பந்த பணிகளுக்கான பாக்கி தொகையை அரசு விடுவித்த பின்பு அதிகாரிகள் இந்த சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 12ம்தேதி மாலையில் பெங்களூரு ஆர்.டிநகர், சுல்தான் பாளையா, மான்யதா டெக் பார்க்கில் உள்ள அரசு காண்டிராக்டரும், அரசு ஒப்பந்ததாரர் சங்க துணை தலைவருமான அம்பிகாபதியின் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவரது மகனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.42 கோடி சிக்கி இருந்தது.

இந்த நிலையில், மற்றொரு கட்டிட காண்டிராக்டர் வீட்டில் நடந்த சோதனையிலும் ரூ.45 கோடி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் கட்டிட காண்டிராக்டராக இருந்து வருபவர் சந்தோஷ் கிருஷ்ணப்பா. இவர், ராஜாஜிநகர் அருகே கியாதமாரனஹள்ளியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

காண்டிராக்டர் சந்தோஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தோஷுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது நேற்று முன்தினம் இரவில் 5-வது மாடியில் உள்ள பிளாட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது டிரங்க் பெட்டிகள், பைகள் உள்ளிட்டவற்றுக்குள் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சந்தோஷின் வீட்டில் சிக்கிய ஆவணங்களை பரிசீலனை நடத்தினார்கள். அவரது வீட்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணத்தை எண்ணும் பணியை தொடங்கினார்கள். அப்போது ஒட்டு மொத்தமாக ரூ.45 கோடி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து சந்தோஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென அம்மாநில பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in