3வது திருமணம் செய்து ரூ.14,00,000 சுருட்டிய கல்யாண மன்னன்; மேட்ரிமோனி மாப்பிள்ளையால் பெண் கண்ணீர் புகார்

வினோத்குமார் - ரம்யா
வினோத்குமார் - ரம்யா

ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்த நிலையில் மூன்றாவதாக மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்த பெண்ணிடம் ரூ.14 லட்சத்தை சுருட்டி சென்ற கணவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார்
வினோத்குமார்

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் ரம்யா(38). இவர் தனது கணவர் குமாரசாமி இறந்த நிலையில், மகளின் பாதுகாப்பு கருதி 2ம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து மேட்ரிமோனி மூலம் தகவல் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை தொடர்ந்து வினோத்குமார் என்பவர் ரம்யாவிற்கு அறிமுகமாகியுள்ளார். ரம்யாவை சந்தித்த அவர், தான் விதவையை திருமணம் செய்து வாழ்வு கொடுக்க விரும்புவதாகவும், இதன் மூலம் சமூக சீர்த்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக இருக்க போவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்ற நிலையில், சீதனமாக 50 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை பெற்றுள்ளார் வினோத்குமார். வேலூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றுவதாக கூறிய வினோத்குமார், வேலூர் அருகே உள்ள அரியூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரம்யாவை தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் மகளை நன்றாக படிக்க வைக்கவும், சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதாகவும் கூறிய வினோத்குமார், ரம்யாவிடம் இருந்து ரூ.14 லட்சத்தினை வாங்கியதுடன், அவற்றை குடித்தே அழித்துள்ளார். இது குறித்து ரம்யா கேள்வி எழுப்பவே இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் ரம்யாவை தாக்கி வீட்டினுள் அடைத்து வைத்துவிட்டு வினோத்குமார் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அவசர போலீஸ் 100 மூலம் புகார் அளித்த ரம்யா காவல் நிலையம் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. போலீஸ் விசாரணையில், வினோத்குமார் ஏற்கெனவே 2 திருமணம் செய்திருப்பதும், அதில் முதல் மனைவிக்கு ஒரு மகன் இருப்பதும் , இரண்டாவது மனைவி இறந்து போனதும் தெரியவந்தது. மேலும் ரம்யாவிடம் வாங்கிய பணத்தில் முதல் மனைவி மகனுக்கு பைக் வாங்கி கொடுத்ததுடன், பல பெண்களுடனும் தொடர்பில் இருந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து சீதனமாக பெற்ற 50 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.14 லட்சத்தை மீட்டுத்தருமாறு வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமியிடம் ரம்யா புகாரளித்துள்ளார். மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து ஏமாந்த ரம்யாவின் கண்ணீர் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in