நடிகர் விமலிடம் ரூ.5 கோடி மோசடி: `மன்னர் வகையறா' படத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது

நடிகர் விமலிடம் ரூ.5 கோடி மோசடி: `மன்னர் வகையறா' படத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது

5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் விமல் கொடுத்த புகாரில் சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

களவாணி, மஞ்சப்பை, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விமல் (41). கடந்த 2018-ம் ஆண்டு வெளியான `மன்னர் வகையறா' திரைப்படத்தின் மூலம் நடிகர் விமல் தயாரிப்பாளராக அறிமுகமானார். நடிகர் விமலின் ஏ3வி சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளராக சிங்காரவேலன் இருந்து வந்தார்.

மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக பைனான்சியர் கோபியிடம் இருந்து சிங்காரவேலன் மூலமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 கோடி ரூபாய் பணத்தை விமல் பெற்றுள்ளார். அப்போது விமலின் நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, அந்த வங்கி கணக்கை சிங்காரவேலன் நிர்வகித்து வந்துள்ளார். மேலும் மன்னர் வகையறா திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன், விற்பனை தொகையை பைனான்சியர் கோபியிடம் கொடுத்து கடனை அடைப்பதாகவும், மீதமுள்ள பணத்தில் நிறுவனத்தில் பணியாயாற்றிய ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவதாக கூறி நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்றுள்ளார்.

பின்னர் மன்னர் வகையறா படம் ரிலீஸ் ஆனவுடன் நஷ்டம் அடைந்ததாக கூறி சிங்காரவேலன் பைனான்சியர் கோபிக்கு கடனை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் பைனான்சியர் கோபி கடனை கேட்டு தொந்தரவு கொடுத்து வருவதாகவும், உடனடியாக சிங்காரவேலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் விமல் கடந்தாண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவுப்படி போரூர் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.