
ஆந்திராவில் 'புஷ்பா' படப் பாணியில் டிரெய்லர் லாரியின் கீழ் ரகசிய அறை அமைத்து ரூ.2.19 கோடி மதிப்பிலான 731 கிலோ கஞ்சா பண்டல்களை கடத்திய லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம், சேஷாசலம் பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் அதிக அளவு கஞ்சா பயிரிடப்படுகிறது. அங்கிருந்து ஆந்திரா மட்டுமல்லாது, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கஞ்சா கடத்தப்படுகிறது. இதனைக் கண்காணிக்க மாநில எல்லைப்பகுதிகளில் போலீஸார் மற்றும் போதைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விஜயவாடாவின் புறநகர் பகுதி வழியாக செல்லும் வாகனங்களைச் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் டிரெய்லர் லாரி ஒன்று வந்தது. அதை வழி மடக்கி நிறுத்தி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த லாரியின் டிரெய்லரில் யாருக்கும் தெரியாத வகையில் அடிப்பகுதியில் ஒரு ரகசிய அறையை சுரங்கம் போல் அமைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பிறகு இந்த ரகசிய அறையைத் திறந்து பார்த்ததில் கட்டு, கட்டாக கஞ்சா பண்டல்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அவற்றை எடையிட்டு பார்த்ததில், 731 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2.19 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திராவில் உள்ள மலைப் பகுதியில் இருந்து கஞ்சா சேகரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பண்டல்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.
இதுகுறிக்கு வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தல் பின்னணியில் வேறு யார் உள்ளார்கள் என விசாரணை நடந்து வருகிறது. 'புஷ்பா' படப் பாணியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!