‘ரூட் தல’ பிரச்சினையைக் கண்காணிக்க வாட்ஸ்-அப் குழு!

சென்னை போலீஸ் நடவடிக்கை
‘ரூட் தல’ பிரச்சினையைக் கண்காணிக்க வாட்ஸ்-அப் குழு!

கல்லூரி மாணவர்களின் ‘டூட் தல’ மோதலைக் கண்காணிக்க, வாட்ஸ்-அப் குழுவை அமைத்தது சென்னை போலீஸ்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தல’ பெயரில் அடிக்கடி மோதல், பேருந்து தின கொண்டாட்டம் என பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்க காவல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், தொடர்ந்து மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா ஊரடங்குக்குப் பிறகு, கடந்த 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரியில் சில மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதையும் மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்து பேருந்துக்கு மாலையிட்டனர். இது தொடர்பாக 200 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பேருந்தில் ரகளையில் ஈடுபட்டதாக 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து புதுக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி பேராசியர்களிடம் அந்தந்த மாவட்ட போலீஸார் ஆலோசனை நடத்தி, பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பட்டியலைக் கேட்டு வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், ‘ரூட் தல’ பிரச்சினையை முற்றிலுமாக ஒழிக்க சென்னை காவல் துறையினர் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர். பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்கிய மாணவர்களை வைத்து, முதற்கட்டமாக அந்தந்த காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் வாட்ஸ்-அப் குழு தொடங்க காவல் துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50 பேரைக் கொண்டு, டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் வாட்ஸ்-அப் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூலமாக பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட மாணவர்களை தூண்டுவோர் யார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு, ஆரம்பத்திலேயே பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல் துறை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in