
குன்னூர் மலைப்பாதையில் 50 அடி உயரத்தில் இருந்து காருக்குள் பாறை ஒன்று உருண்டு விழுந்த விபத்தில், நல்வாய்ப்பாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம் மலைப்பாதைகளில் அவ்வப்போது நிலச்சரிவு மற்றும் பாறை உண்டு சாலையில் விழும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 50 அடி உயரத்தில் இருந்து உருண்டு விழுந்த பாறை ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த காருக்குள் விழுந்து ஓட்டுநர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி அடுத்த சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயேந்திரன் (64) என்பவர் தனது காரில் உதகை சென்று விட்டு, அங்கிருந்து குன்னூர் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் குன்னூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் போது கே.என்.ஆர் அருகே, சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்து காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தது. இதில் ஜெயேந்திரனின் வலது கைவிரலில் பாறை விழுந்து படுகாயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு வலியால் துடித்த போது, அவ்வழியே வந்த ரோந்து போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக, காருக்குள் வேறு யாரும் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
காருக்குள் பாறை உருண்டு விழுந்த சம்பவத்தால் மலைப்பாதையில் பயணம் செய்த வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.