விமானத்தில் வந்து கொள்ளை: கொச்சியை அதிர வைத்த ஹைடெக் கொள்ளையர்கள்!

விமானத்தில் வந்து கொள்ளை: கொச்சியை அதிர வைத்த ஹைடெக் கொள்ளையர்கள்!

விமானத்தில் வந்து கேரளா மாநிலம் கொச்சியில் பூட்டிய பங்களாக்களில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியில் மூன்று நாட்களில் பூட்டியிருந்த 6 சொசுகு பங்களாக்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

கொச்சியில் உள்ள எளமக்கரை கீர்த்தி நகரில் கொள்ளை நடந்த பங்களா அருகே இருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த அடையாளங்களைக் கொண்டு கொச்சி நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள போலீஸார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. மேலும் அனைத்துக் கொள்ளைகளும் ஒரே மாதிரியாக நடந்திருந்ததால் ஒரே கும்பல் தான், இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கும் என்பதால் போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் கொச்சியில் ஒரு உணவகம் அருகில் கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீஸார் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூர் சிம்லா பகதூரைச் சேர்ந்த மின்டு விஸ்வாஸ் (47), உத்தரப் பிரதேச மாநிலம் ஜீப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிசந்திரா (33), குட்பூர் அமாவதி பகுதியைச் சேர்ந்த சந்திரபான் (38) எனத் தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 70 ஆயிரம் ரூபாய், நான்கு செல்போன்கள், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள், 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், " கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்த செல்போன் எண்ணை வைத்து கண்காணித்த போது அவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும், எத்தனை இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in