தேசிய விருது பெற்ற இயக்குநர் வீட்டில் திருட்டு... நகை, பணத்துடன் விருதுகளும் அபேஸ்!

இயக்குனர் மணிகண்டன்
இயக்குனர் மணிகண்டன்

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் புகுந்த திருடர்கள், விருது, நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி விவசாயி படப்பிடிப்பில் மணிகண்டன்
கடைசி விவசாயி படப்பிடிப்பில் மணிகண்டன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பிரபல திரைப்பட இயக்குநரான இவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது சொந்த வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலையாக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ளார். உசிலம்பட்டி வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக் கொண்ட திருடர்கள், திட்டமிட்டு அவரது வீட்டில் திருடியுள்ளனர்.

உசிலம்பட்டியில் அவரது  வீட்டில் அவர் வளர்த்து வரும் நாய்க்கு அவரது டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் தினசரி சென்று உணவு கொடுத்துச் செல்வார்கள். இதன்படி நேற்று மாலை நாய்க்கு உணவளிக்க நரேஷ்குமார் சென்றிருந்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கடைசி விவசாயி படம்
கடைசி விவசாயி படம்

அதில் இயக்குனரின் திறமைக்காக கொடுக்கப்பட்ட விருதுகளும் திருடு போயிருப்பதை கண்டு வேதனை அடைந்தனர். கடைசி விவசாயி திரைப்படத்திற்காக, மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in