
ஒட்டன்சத்திரத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரியம்மாபட்டியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பாண்டியன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது தந்தை வேலுச்சாமிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனை வழங்க வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ரூ. 8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையடுத்து மாரிமுத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் இது குறித்து புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை மாரிமுத்துவிடம் கொடுத்து வருவாய் ஆய்வாளர் பாண்டியனிடம் கொடுக்க கூறியுள்ளனர்.
இதன்படி திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து பாண்டியனிடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீஸார், வருவாய் ஆய்வாளர் பாண்டியனை லஞ்ச பணத்துடன் பிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பின்னர் வருவாய் ஆய்வாளர் நாகராஜனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.