கோவையில் பரபரப்பு... தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி... சமயோசிதமாக பேசி காப்பாற்றிய ‘ தி இந்து’ பத்திரிக்கையாளர்!

உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தல் தேயிலைத் தொழிலாளி
உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தல் தேயிலைத் தொழிலாளி

கோவையில் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தேயிலை தோட்டத் தொழிலாளியை ‘இந்து ஆங்கிலப் பத்திரிக்கையின் செய்தியாளர், அதிகாரி எனக்கூறி சமாதானம் செய்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அய்யர்பாடி அருகே பாரி அக்ரோ தேயிலை தோட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீரமணி (50) என்ற தொழிலாளிக்கும், அதே தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தன்ராஜ் (62) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்த தன்ராஜ், வீரமணி குறித்து தவறான கருத்துக்களை கூறியுள்ளார். இதனை நம்பி அதிகாரிகளும் வீரமணி மீது நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வால்பாறை
வால்பாறை

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி நேற்று திடீரென தேயிலை தோட்டத்தின் அருகில் உள்ள உயர் மின்அழுத்த கோபுரத்தின் மீது ஏறினார். தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்த அவர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அங்கு வந்து தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இறங்கி வருவேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து வீரமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர். மேலும் அவரைக் காப்பாற்றுவதற்காக மின் கோபுரத்தின் மீது ஏறவும் முயற்சித்துள்ளனர். ஆனால் இதனைக் கண்ட வீரமணி, தன்னை காப்பாற்ற யாரேனும் மேலே வந்தால் மின் கம்பத்தை பிடித்து விடுவேன் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மீட்கப்பட்ட தொழிலாளி வீரமணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை
மீட்கப்பட்ட தொழிலாளி வீரமணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை

இதனால் செய்வதறியாது போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் அந்த பகுதியில் திகைத்தப்படி நின்றிருந்த நிலையில், செய்தி பணிக்காக அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த ‘தி இந்து’ நாளிதழின் நிருபர் வில்சன் தாமஸ் என்பவரைக் கண்டதும், அங்கிருந்த போலீஸாருக்கு திடீர் யோசனை தோன்றியது.

அதன்படி வில்சன் தாமஸை, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் எனக் கூறி வீரமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட வில்சன் மின் கோபுரத்தின் கீழே நின்றபடி சுமார் 7 நிமிட நேரம் வீரமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தான் தொழிலாளர் நலத்துறை அதிகாரி எனவும் கீழே இறங்கி வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் வீரமணியிடம் பேசினார். இதனை நம்பிய வீரமணி மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார். அவரை தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். செய்தியாளர் வில்சனின் இந்த துரித உதவிக்கு பொதுமக்கள், போலீஸார், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in