
பல்லடம் அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 4 மாத குழந்தை ஒன்று தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்து அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் கபின்- ஏஞ்சலின் ருபீஸியா தம்பதி. இவர்களின் நான்கு மாத கைக்குழந்தை சுஜனுக்கு இரண்டாவது தடுப்பூசி போடுவதற்காக நேற்று முத்தாண்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றனர்.
அங்கு குழந்தை சுஜனுக்கு தடுப்பூசி ஊசி போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த நான்கு மாத குழந்தை சுஜன் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து பெற்றோர், குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வீட்டில் இருந்த குழந்தை எப்படி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தை சுஜன் பலியானதற்கு தடுப்பூசி காரணம் அல்ல, அன்றைய தினத்தில் அந்த குழந்தையுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்ற ஒன்பது குழந்தைகள் நலமுடன் உள்ளார்கள். அதனால் குழந்தையின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை செய்தால்தான் தெரிய வரும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.