
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் இருந்த தின்பண்டங்களில் எலி விளையாடிய வீடியோ வைரலான நிலையில், ‘’அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட கேண்டீன்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும்’’ என உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், இந்த மருத்துவமனையில், தனியார் சார்பில் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கேண்டீனில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (12-11-23) கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், தின்பண்டங்களை எலி சாப்பிடுவதை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் கேண்டீன் நடத்தும் நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு உரிய பதில் அளிக்காமல் எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, போண்டா போன்றவற்றை எடுத்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர், கேண்டீனை ஆய்வு செய்து தற்காலிமாக மூட உத்தரவிட்டார். இந்நிலையில், கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எலி சாப்பிடுவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ’’அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட கேண்டீன்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தை இழுத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். உணவுகள் தரமற்ற முறையில் நோயாளிகளுக்கு விநியோகம் செய்தால் கேண்டீனின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!