நீலகிரி ஓட்டல் சாம்பாரில் எலி... ராணுவவீரர் குடும்பம் அதிர்ச்சி!

சாம்பாரில் கிடந்த எலிக்குஞ்சு
சாம்பாரில் கிடந்த எலிக்குஞ்சு

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் உணவகத்தில் வாங்கிய சாம்பாரில், எலி உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இரண்டாவது சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜெகன் என்ற ராணுவ வீரர், சுற்றுலாவிற்காக தனது குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று காலை அவர் உணவு அருந்தி உள்ளார். அப்போது தோசைக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் எலிக்குஞ்சு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார்
உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார்

இது தொடர்பாக உணவக உரிமையாளர்களிடம் கேட்டபோது, காய்கறியில் தவறுதலாக புழுக்கள் ஏதேனும் வந்திருக்கலாம் மற்றபடி இது எலிக்குஞ்சு இல்லை என அவர்கள் மழுப்பலாக கூறியதாக தெரிகிறது. இருந்த போதும் இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்ட ஜெகன், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணி ஜெகன்
சுற்றுலாப் பயணி ஜெகன்

இந்த ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் சரியாக உள்ளதா என்பதை உணவகங்கள் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், விதிமுறைகளை மீறும் உணவகங்களுக்கு சீல் வைப்பது, உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரியில் சாம்பாரில் எலிக்குஞ்சு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in