சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடி மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த கைதி சிக்கினார்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி டிஎன்ஏ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பாேது தப்பியோடினார். மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றி திரிந்த கைதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் ராஜா (42). இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மே மாதம் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸார் செந்தில் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நான்கு மாதங்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் ராஜா டி.என்.ஏ பரிசோதனைக்காக கடந்த 6ம் தேதி கோயம்பேடு மகளிர் போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
அப்போது பரிசோதனைக்கு முன்பு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கைதி செந்தில் ராஜா மருத்துவமனை பின்பக்கம் சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டார். தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இதற்கிடையே போக்சோ வழக்கு குற்றவாளி தப்பி சென்ற விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட பெண் காவலர் லாவண்யா மற்றும் காவலர் சுரேஷ் ஆகிய இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கைதி செந்தில் ராஜா மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றி வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர். இன்று காலை வடபழனி அருகே பதுங்கி இருந்த செந்தில் ராஜாவை கோயம்பேடு போலீஸார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட செந்தில் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.