சிறைத் தண்டனையால் என்ன பயன்? விடுதலையான பலாத்கார குற்றவாளி... மற்றொரு சிறுமியை சிதைத்த அவலம்!

மீண்டும் போலீஸ் பிடியில் ராகேஷ் வர்மா
மீண்டும் போலீஸ் பிடியில் ராகேஷ் வர்மா

சிறைத் தண்டனை முடிந்து விடுதலையான பலாத்கார குற்றவாளி மீண்டும் அதே குற்றத்தை செய்திருப்பது, சிறைச்சாலைகள் குற்றவாளியை திருத்த முடியாததன் நிதர்சனத்தை உணர்த்தி இருக்கின்றன.

மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் வர்மா. தற்போது 35 வயதாகும் இந்த நபர், 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதானார். அவருக்கு எதிரான வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு, ராகேஷ் வர்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பானது.

சிறையில் அடைக்கப்பட்ட ராகேஷ் வர்மா, அவரது நன்னடத்தைகளின் பெயரால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையின் முடிவில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். ராகேஷ் வர்மா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு, அவரது நன்னடத்தையே காரணம் என்பதை அவரது சிறைக்கு வெளியிலான நடத்தை தற்போது பொய்யாக்கி இருக்கிறது.

 சிறைத் தண்டனை
சிறைத் தண்டனை

நேற்று மாலை சாத்னா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியில், சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராகேஷ் வர்மா பிடிபட்டார். இந்த குற்றத்தை நிகழ்த்துவதற்காக, பல நாட்களாக சிறுமி குடும்பத்தாருடன் பழகி, சிறுமியின் நம்பிக்கையை பெற்று வந்துள்ளார். திடீரென அந்த சிறுமியை தனது வீட்டில் வைத்து காட்டுமிராண்டித்தனமாய் பாலியல் பலாத்காரத்தை நிகழ்த்தியுள்ளார்.

இதில் சிறுமியின் உடல்நிலை வெகுவாய் பாதிக்கப்பட்டது. தற்போது ரேவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. சிறுமி சிதைக்கப்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி அலையை தணிக்க, மத்திய பிரதேச அரசு சார்பில் ராகேஷ் வர்மா வீட்டின் மீது புல்டோசர் நடவடிக்கைக்கும் உத்தரவாகி உள்ளது.

சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக தண்டனைக்கு ஆளான நபர், தண்டனைக் காலம் முடிந்து விடுதலையான பிறகும் அதே குற்றத்தை நிகழ்த்தி இருப்பது, சிறைத் தண்டனைகளால் குற்றவாளிகளை திருத்த முடிகிறதா என்ற ஆழமான விவாதத்தை எழுப்பி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in