
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார் கம்பிவேலியில் மோதி விபத்திற்குள்ளானதில், மர வியாபாரிகளுடன் சென்ற வனச்சரக ரேஞ்சர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விபத்து நேர்ந்த காரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் வனச்சரக ரேஞ்சராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். கொல்லிமலை பகுதியில் முறைகேடாக மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதற்கு ரேஞ்சர் ரகுநாதன் உதவியாக இருந்ததாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தது. இருப்பினும் குற்றச்சாட்டுகள் எதுவும் உறுதி செய்யப்படாததால், இந்த விவகாரம் குறித்து வனத்துறை விசாரணை நடத்தவில்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த மர வியாபாரியான ராஜன் என்பவர் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் செல்வகுமார் என்பவருடன், நேற்று கொல்லிமலை பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர்களுடன் வனச்சரக ரேஞ்சர் ரகுநாதனும் கார் ஒன்றில் சேலம் நோக்கி சென்றுள்ளனர்.
மூவரும் மரத்தை வெட்டுவதற்கான இயந்திரங்கள் வாங்க பணத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று இரவு பேளுக்குறிச்சி அருகே உள்ள மோளப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த நிழற்குடையின் அருகே உள்ள கம்பிவேலியில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரது உடல்களையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த பணத்தை மரக்கடத்தல் கும்பலுக்கு தர எடுத்துச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொல்லிமலையில் அவர்கள் தங்கி இருந்த விடுதி மற்றும் அவர்கள் சந்தித்த நபர்களை விசாரணை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். மர வியாபாரியுடன் வனத்துறை ரேஞ்சர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!