`கொன்று கூவத்தில் வீசிவிடுவேன்'- ரூ.2 கோடி மோசடி செய்த ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மிரட்டல்

`கொன்று கூவத்தில் வீசிவிடுவேன்'- ரூ.2 கோடி மோசடி செய்த ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மிரட்டல்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 2 கோடி ரூபாய் மோசடி, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான சுதாகரன் என்பவர் தனக்கு நெருங்கிய நண்பர். அவர் அமைச்சரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனால் அரசு வேலை தேடி கொண்டிருந்த தனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்று அரசு வேலைக்காக அமைச்சரின் உதவியாளர் சுதாகரன் தலைமை செயலகத்தில் வைத்து வழங்கினார்.

சில வருடங்களாகியும் அவர் கூறியது போல் அரசு வேலை வழங்கி தராமல் இருந்ததால் சந்தேகமடைந்து உதவியாளர் சுதாகரனிடம் இது குறித்து கேட்டபோது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் முழுவதையும் கொடுத்து விட்டதாகவும், இன்னும் சில தினங்களில் வேலை கண்டிப்பாக கிடைத்துவிடும் என கூறி காலம் தாழ்த்தி வந்ததாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி பணத்தை திரும்ப கேட்பதற்காக தலைமை செயலகம் சென்றதாகவும் அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை கட்டாயமாக கிடைத்துவிடும் என கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து ஆட்சி மாற்றம் வந்த உடன் அமைச்சரின் உதவியாளர் சுதாகரன் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, தற்பொழுது நான் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளராக இல்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம்தான் பணம் உள்ளது. இனி பணம் கேட்டு என்னிடம் வரவேண்டாம். தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து கூவத்தில் வீசிவிடுவேன் என மிரட்டினார். தன்னிடம் 2 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உதவியாளர் சுதாகரன், அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in