வீட்டில் நடந்த பூஜை; துண்டானது 9 வயது சிறுமியின் தலை: 15 வயது சிறுமி வெறிச்செயல்!

கொலை
கொலை

ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனது உறவினரான ஒன்பது வயது சிறுமியில் தலையை வாளால் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலையில் 15 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டில் தசா மாதா பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று, அந்த சிறுமி வெறித்தனமாகச் சென்று, அறையில் வைத்திருந்த வாளை வெளியே எடுத்து அனைவரையும் தாக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோரையும்கூட தாக்க முற்பட்டதால் அனைவரும் அங்கிருந்து தப்பினார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி மற்றொரு அறைக்குள் நுழைந்து, ஒன்பது வயது சிறுமி வர்ஷாவின் தலையை வாளால் வெட்டினார்.

அதனைத் தொடர்ந்தும் 15 வயது சிறுமி தனது கைகளில் வாளை ஏந்தியபடி, அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று சொல்லி வீட்டு முற்றத்தில் ஓட ஆரம்பித்தார். சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் அவரது மூத்த சகோதரர் சுரேஷ் ஆகியோர் பிடிக்க முயன்றபோது, ​​​​அவர்கள் இருவரையும் வாளால் தாக்கினார். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சக்வாரா காவல்துறை அதிகாரி நர்பத் சிங், ”10-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவளுடைய நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவள் விசித்திரமாக நடந்து கொண்டாள். அவளுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று தோன்றுகிறது. மேலும், பூஜையின் காரணமாக அவள் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in