
மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையம் அருகில் வான்வெளியில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் காணப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, ரஃபேல் போர் விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையம் அருகே நேற்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் விண்வெளியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்ததை பலர் பார்த்துள்ளனர்.
வெள்ளை நிறத்தில் தட்டு வடிவத்தில் அந்த பொருள் இருந்துள்ளது. அது பறக்கும் தட்டு என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதையடுத்து, வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாகச் செல்ல வேண்டிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், அந்தப் பறக்கும் தட்டு மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
பறக்கும் தட்டு பற்றிய தகவல் கிடைத்ததும் அருகாமையில் உள்ள விமான தளத்தில் இருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. இந்த விமானத்தில் அதிநவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.
போர் விமானங்கள் வான்வெளியில் தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்திலேயே சென்று சந்தேகத்திற்குரிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் எதுவும் சிக்கவில்லை. எனினும், இம்பால் விமான நிலையம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பறக்கும் தட்டு பதிவாகியுள்ளது. அதனை வைத்து தொடர் விசாரணை மற்றும் ஆய்வு நடைபெற்று வருவதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற யு.எஃப்.ஓக்கள் எனப்படும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் காணப்படுவதாக தகவல் வெளியான போதும், முழுமையான விளக்கத்தை விஞ்ஞானிகள் கொடுக்க முடியவில்லை.
சில இடங்களில் மட்டும், அவை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மற்றும் பலூன்கள் என்பது தெரிய வந்துள்ளது. இம்பாலில் காணப்பட்ட இந்த பொருளும் அத்தகைய உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட பொருளா என பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.