யூடியூப் உதவியுடன் வீட்டிலேயே துப்பாக்கித் தயாரிப்பு: தீவிரவாதிகளுடன் தொடர்பா என வாலிபர்களிடம் விசாரணை

யூடியூப் உதவியுடன்  வீட்டிலேயே துப்பாக்கித் தயாரிப்பு: தீவிரவாதிகளுடன் தொடர்பா என வாலிபர்களிடம் விசாரணை
வீட்டில் இயங்கிய துப்பாக்கித் தொழிற்சாலை.

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள் இருவரிடம் க்யூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. மேலும் காவல்நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அவர்கள், எருமைபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் எனத் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் செட்டிப்பாளையம் அருகே வனப்பகுதியில் தனிமையில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்துள்ளனர். மேலும் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டனர். அவர்கள் சொல்வது உண்மைதானா எனக் காவல்துறையினர் அந்த வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது, துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் அந்த வீட்டில் இருந்துள்ளது. அவர்கள் வீட்டில் ஒரு சிறிய துப்பாக்கித் தொழிற்சாலையே செயல்பட்டு வந்ததைக் கண்ட காவலர்கள் மிரண்டு போனார்கள். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருக்கும் அவர்களிடம் விசாரணை செய்வதற்காக இரண்டு நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி தயாரிப்பு, தீவிரவாத தொடர்பு, நிதி உதவி என பல்வேறு கோணங்களில் க்யூ பிரிவினரும் சுமார் 250 கேள்விகளோடு அவர்களிடம் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in