
பஞ்சாப் மாநிலம் ரோபர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா ராணி (73). இவரது கணவர் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு மகன், மகள் உள்ளார். எனவே, இவர் தனது மகன் அங்கூர் வர்மாவுடன் வசித்து வந்திருக்கிறார். வழக்கறிஞரான அங்கூருக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி, ஒரு மகனும் உள்ளார்.
உடல் நிலை சரியில்லாத ஆஷா ராணியால் நடமாட முடியாத நிலையில் அவர் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், தான் தனது மகன், மருமகள் மற்றும் அவரது பேரனால் மூதாட்டி ஆஷா ராணி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் மூதாட்டி ஆஷா ராணியின் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
அந்த வீடியோவில், படுக்கையில் மூதாட்டி சிறுநீர் கழித்திருந்தார். இதனை பார்த்த அவரது பேரன், அவரது பெற்றோரிடன் தெரிவிக்கிறார். இதனை அடுத்து, மூதாட்டியின் மகன் அங்கூர் வர்மா, அவரது தாயின் படுக்கையை தொட்டு பார்த்து ஆத்திரமடைந்து, கழிவறையில் இருந்த மூதாட்டியை, தரதரவென இழுத்து வந்து படுக்கையில் போட்டு அவரை ஈவு இரக்கமின்றி அடித்திருக்கிறார். இதனை அங்கூர் வர்மாவின் மகன், மனைவி பார்த்துக் கொண்டு, மூதாட்டியை திட்டி கொண்டு இருக்கின்றனர்.
பெற்ற தாயென்றும் பாராமல் ஆஷா ராணியின் முதுகு, கன்னத்தில் இரக்கமின்றி அடித்திருக்கிறார். பின்னர், தலையிலும் அடித்துள்ளார். சிறுநீர் ஏன் கழித்தாய் என்று பலமுறை கேட்டு துன்புறுத்தியிருக்கிறார். மூதாட்டி தெரியாமல் செய்தேன் என்று கூறிய பின்னும், ஆத்திரம் தீர தாக்கிவிட்டு, படுக்க வைத்து விட்டு செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அவரது மகளிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் தீப்ஷிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அங்கூர் ஷர்மா மற்றும் அவரது மனைவி மீது 24 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதனை அடுத்து, அவரது வீட்டிற்கு சென்று, மூதாட்டி ஆஷா ராணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுக்கையில் சிறுநீர் கழித்த தாயை, அவரது மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.