காதலியை வசதியாய் வாழ வைக்க தொடர் திருட்டு... செல்போனால் சிக்கிக்கொண்ட இளைஞர்!

கைதான கோடீஸ்வரன்
கைதான கோடீஸ்வரன்

தமிழகத்தில் பல பகுதிகளில் கைவரிசை காட்டி கொள்ளையடித்த நபர் புதுச்சேரியில் திருட்டில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வரதன். நேற்று இவர் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை சந்திப்பதற்காக விழுப்புரம் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் சமையலறை ஜன்னல் கதவை அறுத்து உள்ளே சென்று நாலரை பவுன் தங்கம் நகை, 40,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு செல்போனை திருடி சென்றார். இது குறித்து அறிந்த வரதன் உடனடியாக காவல் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காலாப்பட்டு போலீசார் விசாரணையை துவங்கினர்.

கைரேகை, சிசிடிவி, வாகனம் என கொள்ளையடித்து சென்றவர் வந்து சென்றதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால், மர்ம நபரை பிடிக்க அவர் திருடி சென்ற செல்போன் எண்ணை வைத்து தேடினர். அப்போது, அந்த செல்போன் சிக்னல் நம்பர் 1 கீ.மி தூரம் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் காட்டியுள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பாழடைந்து இருந்த கட்டடத்தில் பையுடன் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அவரிடம் சோதனை நடத்தியதில், வரதன் வீட்டில் திருடிய 4 பவுன் நகை, ரூ. 40,000 மற்றும் செல்போன் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

செல்போன் திருட்டு
செல்போன் திருட்டு

இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன் (30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருட்டுக்கு பயன்படுத்திய கட்டிங் இயந்திரங்கள், கையுறை போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குகள் இருப்பது தெரியவந்தது. சேலம், ஓமலூர், காங்கேயம், ஈரோடு, புளியம்பட்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் 24 க்கு மேற்பட்ட வழக்குகள் அவர் மீது உள்ளது.

இவருக்கு ஒரு காதலி உள்ளார். அவர் அவருடன் வசதியாக வாழ்வதற்கு விரும்பிய ஈஸ்வரன் பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ஒரு வீட்டில் திருடுவதற்கு முன்பாக ஒருவார காலத்திற்கு நோட்டமிட்டு பேருந்தில் மட்டுமே பயணித்து வந்துள்ளார். பைக் வைத்திருப்பது இல்லை, செல்போன் வைத்திருப்பது இல்லை. இதன் காரணமாகவே அவர் பல ஆண்டுகளாக தமிழகத்தில் திருடியும் போலீசிலும் சிக்காமல் இருந்துள்ளார். ஆனால், புதுச்சேரியில் பணம், நகையுடன் செல்போனையும் அவர் திருடியதால், சம்பவத்தில் ஈடுபட்ட 12 மணி நேரத்தில் போலீஸில் சிக்கிக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in