`பப்ஜி மதனின் பேச்சு நச்சுத்தன்மை உடையதாக இருக்கிறது'

மனைவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
பப்ஜி மதன்
பப்ஜி மதன்

பப்ஜி மதனின் பேச்சு நச்சுத்தன்மை உடையதாக இருக்கிறது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மனைவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது வழக்குப் பதிவு செய்தனர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதன், கடந்த 2021 ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு எதிராக பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்தது. இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பப்ஜி மதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரி பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ், நக்கீரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருத்திகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 மாதத்திற்கு மேலாக பப்ஜி மதன் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உடல்நிலையை காரணம் காட்டி முன்கூட்டியே விசாரணை கேட்பதாகவும், ஆனால் மதனின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே தேவைப்படுவதாகவும் தெரிவிக்கபட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மதனின் பேச்சு நச்சுத்தன்மை உடையதாக இருக்கிறது என்றும் அவரை ஏன் வெளியில் விட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியதோடு, குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அதை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்று கூறி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in