சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு ... குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!

வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள்
வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்
இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55) என்பவர்,  செங்கமலப்பட்டி அருகே  சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார்.  இந்த ஆலையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பட்டாசு ஆலையில்   நேற்று பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. 

தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து ஆலைக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 7 அறைகள் தரைமட்டமானது, மேலும் 7 அறைகள் கடுமையாக  சேதமடைந்தது. இந்த விபத்தில்  காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த விபத்தில் மத்தியசேனை சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சந்திவீரன் மனைவி வீரலட்சுமி (48),  வி.சொக்கலிங்கபுரம் குருசாமி மகன் காளீஸ்வரன்(47), சிவகாசி ரிசர்வ்லைன் மச்சக்காளை மனைவி முத்து(52), மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள்(75), சக்திவேல் மனைவி வசந்தி(38), இந்திரா நகர் கணேசன் மனைவி பேச்சியம்மாள் (எ) ஜெயலட்சுமி (22), லட்சுமி (43), விஜயகுமார் (30), மத்திய சேனையைச் சேர்ந்த கீதாரி மகன் அழகர்சாமி ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின்  அனுமதி பெற்று விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வெடிவிபத்தில்  காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பேராசை காரணமாகவே பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்வதாக தெரிவித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in