நிதாரி தொடர் கொலை வழக்கு... போதிய ஆதாரமில்லாததால் விடுதலையான மருத்துவர்!

நிதாரி தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேந்திரா, மொனிந்தர்
நிதாரி தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேந்திரா, மொனிந்தர்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்குகளில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொனிந்தர் பந்தேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே உள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் கடந்த 2005 முதல் 2006 வரை ஏராளமான குழந்தைகள் மாயமாகினர். இது தொடர்பாக போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மொனிந்தர் பந்தேர் என்ற மருத்துவரின் வீட்டின் அருகே குழிகள் தோண்டி சோதனையிட்டனர்.

அப்போது அங்கிருந்த கழிவுநீர் செல்லும் ஓடை மற்றும் மொனிந்தரின் வீடு அருகே உள்ள பகுதிகளில் ஏராளமான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டது.

மாயமான குழந்தைகளில் சிலர்
மாயமான குழந்தைகளில் சிலர்

சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இவ்வாறு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் மொனிந்தர் மற்றும் அவரது வீட்டு வேலையாள் சுரேந்திர கோலி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்திருந்தனர்.

சுமார் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மொனிந்தர் மற்றும் சுரேந்திராவுக்கு கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது. இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், போலீஸார் தரப்பில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

குழந்தைகளின் உடல் உறுப்புகளை கழிவுநீர் கால்வாயில் தேடும் மக்கள்
குழந்தைகளின் உடல் உறுப்புகளை கழிவுநீர் கால்வாயில் தேடும் மக்கள்

இருப்பினும் முக்கிய குற்றவாளியான சுரேந்திரா மீது 20 வயது பெண் ஒருவரை கொலைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, மொனிந்தர் இன்று கிரேட்டர் நொய்டா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தங்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், கொலை வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்தவர், விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வட மாநிலங்களில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in