அதிர்ச்சி: வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு!

உயிரிழந்த ஹேமலதா
உயிரிழந்த ஹேமலதா

கிருஷ்ணகிரி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற ஜேசிபி ஆபரேட்டருக்கும், எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மெய்யழகன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹேமலதா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதை கேட்காமல் ஹேமலதாவின் குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சில மணி நேரங்களில் ஹேமலதாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து ஹேமலதா மற்றும் குழந்தையை மீட்டு குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமலதாவிற்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in