காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு!- சாமியார் கோலத்தில் தலைமறைவாக இருந்தவர் தி.மலையில் கைது

கைது
கைது

திருமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் சாமியார் கோலத்திலிருந்த அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகேஷ்
நாகேஷ்

பெங்களூரு, ஹெக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ். அவர் வசிக்கும் வீட்டின் மாடியில் துர்கா (பெயர் மாற்றம்) என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியிலுள்ள தங்க நிதி நிறுவனம் ஒன்றில் துர்கா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு துர்காவிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார் நாகேஷ். இதற்கு மறுப்பு தெரிவித்த துர்கா, வீட்டிலுள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கட்டிட உரிமையாளர், நாகேஷிடம் வீட்டைக் காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் துர்கா மீது கடும் ஆத்திரத்திலிருந்து வந்துள்ளார் நாகேஷ். சம்பவத்தன்று வழக்கம் போல அலுவலகத்திற்குச் சென்ற துர்காவை, நாகேஷ் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அலுவலகத்தில் நுழைந்த துர்கா முகத்தில் டாய்லெட் சுத்தம் செய்யும் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்தார் நாகேஷ். வலியால் துடித்த துர்காவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து நாகேஷ் தலைமறைவாக இருந்து வந்தார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

கர்நாடக மாநில காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அடுத்த சில தினங்களில் பாபுவின் செல்போன் எண்ணில் புதிய சிம்கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்போன் டவர் மூலமாக, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த செல்போன் பயன்படுத்தியவரைச் சுற்றி வளைத்தனர். ஆனால் வேறொரு நபர் அந்த செல்போனை பயன்படுத்துவது தெரிந்தது. காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் சாலையில், கண்டெடுத்த செல்போனை அவர் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நாகேஷை கைது செய்யும் படி காவல் துறையினருக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது. இந்நிலையில் அவர் திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். திருவண்ணாமலையிலுள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் சாமியார் கோலத்தில் தங்கியிருந்த நாகேஷ், பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in