சாராயக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு… குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸார்!

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

புதுச்சேரியில் சாராயக்கடையில் 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த 3 பேர், அந்த சாராயக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சாராயக்கடைக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் 500 ரூபாய் கொடுத்து சாராயம் கேட்டுள்ளனர். ஆனால், அங்கு பணியில் இருந்த மேகநாதன், பகவதி ஆகிய இரண்டு காசாளர்களும் 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கூறினர்.

இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த மூவரும் அங்கிருந்த சாராய பாட்டில்களை எடுத்து அவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அதிகாலை 3 மணியளவில் மீண்டும் அந்த சாராயக்கடைக்கு வந்த மூவரும் சாராய பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரி வைத்து சாராயக்கடையில் அடித்தனர்.

பாட்டில் சிதறல்கள்
பாட்டில் சிதறல்கள்

அங்கு பணியில் அந்த ஊழியர்களும், மது அருந்த வந்த மற்றவர்களும் அலறியடித்துக்கொண்டு பயந்து அங்கிருந்து தப்பியோடினர். பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதால் அங்கு தீ பற்றி எரிந்தது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த தீயால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் மூவரும் சாவகாசமாக இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர். இது குறித்து அறிந்த மேற்கு எஸ்பி வம்சிதா ரெட்டி உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜகுமார் மேற்பார்வையில் எஸ்ஐ ராஜசேகர் தலைமையிலான போலீஸார் மூன்று பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

கைது செய்யப்பட்ட விவேக்
கைது செய்யப்பட்ட விவேக்

இதில் முதல் குற்றவாளியான பரசுரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் விவேக் (28) என்பவரை ஆண்டியார் பாளையம் பகுதியில் உள்ள சாராயக்கடையில் போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் அவருடன் இருந்த தென்னல் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் ஆகிய இருவரும் அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் குதித்து தப்பி சென்று விட்டனர்.

கைதான விவேக்
கைதான விவேக்

இந்த இரண்டு பேர் மீதும் கண்டமங்கலம் வில்லியனூர் ஆகிய பகுதிகளில் கொலை வழக்கு உள்ளது . கைது செய்யப்பட்ட விவேக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in