டிரைவரை எரித்துக் கொன்ற வழக்கில் போலீஸ்காரரின் காதலி கைது!

கவிதா
கவிதா

சென்னை கே.கே. நகரில் காணாமல் போன ரவி என்பவரைக் கொலை செய்த வழக்கில் காவலர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரின் காதலியைக் கைது செய்த மதுராந்தகம் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரவி
கொலை செய்யப்பட்ட ரவி

சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1-ம் தேதி ரவி தனியாக வீட்டிலிருந்த போது மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்திலிருந்து வருவதாகக் கூறி, ரவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

தகவல் அறிந்த ரவியின் மனைவி ஐஸ்வர்யா, கோயம்பேடு காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்த போது, ரவி என்பவரை நாங்கள் கைது செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா பல இடங்களில் தேடியும் ரவி கிடைக்கவில்லை. இதனால் கடந்த 4-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில்," செம்பியம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த செந்தில் குமார், அவரது காதலியுடன் எங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தார். அவருடன் சேர்ந்து எனது கணவர் ரவி மது அருந்தி வந்தார். எங்களின் குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால் செந்தில்குமாருக்கும் எங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. செந்தில்குமார் விடுத்த கொலை மிரட்டலை அடுத்து எனது கணவர் காணவில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், ரவி வீட்டருகே குடியிருந்த கவிதா என்ற பெண்ணுடன் செந்தில்குமார் தொடர்பிலிருந்து வந்துள்ளார். இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், படாளம் பகுதியில் ஒரு ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சடலத்தை மீட்ட படாளம் காவல்துறையினர் அது காணாமல் போன ரவியின் உடலா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட உடல் பகுதிகள் டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மதுராந்தகம் காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில் குமார் தொடர்பிலிருந்த கவிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, " ரவியின் குழந்தை எங்கள் பகுதியில் சிறுநீர் கழித்ததின் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டு உரிமையாளர் இரண்டு குடும்பங்களையும் காலி செய்யச் சொல்லிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த செந்தில் குமார் ரவியைக் கொலை செய்து எறித்து விட்டார்” எனக் கூறியுள்ளார். மேலும் கவிதாவைக் கைது செய்த காவல்துறையினர் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in