கந்து வட்டி கேட்டு பெண் மிரட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை: கடலூரில் நடந்த துயரம்


கந்து வட்டி கேட்டு பெண் மிரட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை: கடலூரில் நடந்த துயரம்
செல்வகுமார்

அவசரத்திற்கு வாங்கிய கடனுக்கு, வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூலித்ததால் மனமுடைந்த காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றியவர் துறிஞ்சிக்கொல்லையைச் சேர்ந்த முருகன் மகன் செல்வக்குமார் ( 27). இவர் கடந்த 1-ம் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை கடலூர் புதுநகர் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில், குடும்ப செலவுக்காக அனிதா என்ற பெண்ணிடம் செல்வகுமார் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதும், அந்தப் பணத்தை திருப்பி செலுத்தி விட்டாலும், அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் மனவேதனை அடைந்த செல்வகுமார் விஷம் குடித்து விட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செல்வகுமாரின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், கந்து வட்டி கேட்டு மிரட்டல், தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கடலூர் புதுநகர் போலீஸார் பெரியநெல்லிக் கொல்லையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அனிதா(35) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in