சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?

சமீபத்தில் நடந்த காவல் கண்காணிப்பாளர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "புதிய முதலீடுகள் கிடைப்பதற்கும், அதன் வழியாக ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் சட்டம் - ஒழுங்கு மிக மிக முக்கியம். தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார்.

கண்ணப்பன்
கண்ணப்பன்

சில நோய்களுக்கு ஒரே மாத்திரை போதும். சில நோய்களுக்கோ கூட்டு மருத்துவம் தேவைப்படும். அப்படியான பிரச்சினை இது. வெறுமனே காவல்துறை மட்டுமே இப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. பெண்கள், குழந்தைகள் மீதான குற்றம் நடைபெறாமல் தடுப்பதில் குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும், நடந்த பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கே அதிகமிருக்கிறது. இதுபோன்ற வழக்குகளை தமிழக காவல்துறை சிறப்பாக கையாள்கிறதா? குறைகளை எப்படிக் களையலாம் என்று ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பெ.கண்ணப்பனிடம் கேட்டோம்.

"காவல்துறையினர் முதலில் செய்ய வேண்டியது பொதுமக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெறுவது. எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், போலீஸிடம் போய்ச் சொன்னால், காரியம் நடக்குமா, வேறு பிரச்சினை வருமா? என்கிற தயக்கமோ பயமோ இல்லாமல் காவல்துறையை அணுகுகிற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டும். அப்படியிருந்தால்தான், பெற்றோர்களோ, உறவினர்களோ மற்றவர்களின் கைப்பாவையாக மாற மாட்டார்கள். நடந்தது நடந்துவிட்டது, காவல்துறை நமக்கு நம்மைதான் செய்யும் என்கிற உணர்வை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். அது அவ்வளவு எளிமையான வேலையல்ல. அதற்கு காவல்துறையினர் எல்லாப் பிரச்சினைகளையும் மனப்பூர்வமாக அணுக வேண்டும். உயர் அதிகாரிகளும் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சில அதிகாரிகள் பிரச்சினைகளைக் கையாள்கிறபோது, விளம்பரக் கண்ணோட்டத்துடன் தீர்வு காண ஆரம்பிக்கிறார்கள். அந்த பப்ளிசிட்டி ஆரம்பத்தில் சுவையாக இருந்தாலும், காலப்போக்கில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்கு பல நடைமுறை உதாரணங்கள் இருக்கின்றன. எனவே, பிரச்சினையின் அடிப்படையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பத்தான் தீர்வு காண வேண்டுமே தவிர, வேறு முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ததோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், நீதிமன்றத் தீர்ப்பு வரையில் வழக்கைக் கண்காணிக்க வேண்டும். நூற்றுக்கு இரண்டு வழக்குகளில்தான் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கிறது என்பதும்கூட காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் கண்ணப்பன்.

"ஒரு பெண் மாயமாகிவிட்டார் என்று பெற்றோர்கள் புகார் கொடுக்கிறபோது, அவள் காதலனோடு ஓடியிருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்துகிறார்கள். மேலூரிலும் கூட அதுதான் நடந்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் போலீஸார் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டோம்.

"ஒரு வழக்கைச் சொல்லி, இதற்குப் பதில் தந்தால் எளிதாகப் புரியும். மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஓர் காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் அவர்களை கேரளாவில் போய் கண்டுபிடிக்கிறார்கள். அதற்குப் பிறகே மதுரையில் கேர்ள் மிஸ்ஸிங் வழக்குப்பதிவு செய்கிறார்கள். கேரள போலீஸ் நிலையத்தில், அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்கிறோம் என்று கூறிவிட்டு ஊருக்கு வந்ததும் பையனை அடித்துத் துரத்திவிட்டு பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து, திருமணத்துக்காக புத்தாடை எடுக்கச் சென்றபோது அந்தப் பெண் பழைய காதலனை அங்கு வரவைத்து தப்பிக்க முயற்சிக்க, கைகலப்பாகிறது.

ஜவுளிக்கடை இருக்கிற ஊரிலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவாகிறது. அந்தப் பெண், ‘நான் காதலனுடன்தான் செல்வேன்’ என்று அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் சமூகநலத்துறை விடுதியில் அந்தப் பெண்ணை ஒப்படைத்துவிடுகிறது போலீஸ். பிறகு, மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பெண், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கிறாள். போலீஸ் ஒத்துழைப்போடு அந்தப் பெண்ணின் உடலை வழக்குப் பதியாமலேயே எரித்துவிடுகிறார்கள் பெற்றோர்.

விஷயம் தெரிந்து, அவளது காதலன் நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறான். என் மனைவியை கேரளாவுக்கே வந்து கடத்திச்சென்ற போலீஸார், அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து ஜாதி ஆணவக்கொலை செய்யவைத்துவிட்டார்கள் என்று. வழக்கு சிபிஐ வசம் போனதும், ஏன் உடன்போக்கு வழக்கு போடலாம், கேர்ள் மிஸ்ஸிங் என்று போட்டீர்கள், கேரளாவில் பிடிபட்ட பெண்ணை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை, அவள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஏன் வழக்குப் பதியவில்லை என்று நிறைய கேள்விகளைக் கேட்டு, போலீஸார் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஒரு வழக்கைத் தவறாக பதிவு செய்யும்போது, அது போலீஸையே பாதிக்கும். சமயத்தில் போலீஸே ஜெயிலுக்கும் போக வேண்டியதிருக்கும். ஒரு பெண் காணவில்லை என்றால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கிறது. குற்றம் நடந்துவிட்டால் முதலில் எஃப்.ஐ.ஆர். போட்டு சட்டத்தை நுழைத்துவிட வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது சரியில்லாத கண்ணோட்டம்" என்றார் கண்ணப்பன்.

"இரண்டு ஜாதி அல்லது இரண்டு மதத்தினர் இடையேயான பெண் பிரச்சினை என்கிறபோது, போலீஸாருக்கு தயக்கம் வருவது இயல்புதானே... நடவடிக்கை என்ற பெயரில் தேன்கூட்டில் கல்லெறிந்துவிட்டு, சட்டம் - ஒழுங்கை நாமே கெடுத்துவிடக் கூடாது என்று போலீஸார் அஞ்சுகிறார்கள். இப்படியான நேரத்தில் எப்படி புத்திசாலித்தனமாக செயல்படுவது?" என்று நாம் கேட்டபோது,

"எல்லாவற்றுக்கும் ஒரே ஃபார்முலா ஒத்துவராது. வழக்குக்கு வழக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படும். வழக்கைக் கையாள்கிற அதிகாரியைப் பொறுத்து பிரச்சினைக்கு வேகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதிகாரி நல்லவர், எல்லோருக்கும் பொதுவானவர் என்று பெயரெடுத்திருந்தால் அவர் சொல்கிற தீர்வை, ‘அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று இரு தரப்பினரும் அப்படியே ஒப்புக்கொள்வார்கள். மோசமான அதிகாரி என்று பெயர் எடுத்தவர், சரியான தீர்வைச் சொன்னாலும் சந்தேகப்படுவார்கள். இதற்கு நிறைய உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்" என்றார் கண்ணப்பன்.

காவல்துறையினருக்குப் பயிற்சி

"இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாளர்வதற்கு காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா?" என்று தற்போது பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இல்லை. அவ்வப்போது ஓரிரு நாள் பயிற்சி மட்டுமே அளிக்கிறார்கள். இது போதுமானதல்ல. பரேடு, ரோல்கால், க்ரைம் மீட்டிங் போன்றவை முன்பு லேர்னிங் பிராசஸாகவும் இருந்தது. இப்போது அதுகூட முறையாக நடப்பதில்லை. எப்படி புதிதாக வேலைக்குச் சேரும் காவலர்களுக்கு 6 மாத கால பயிற்சி அளிக்கிறோமோ, அதேபோல ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை காவலர்களுக்கு குறைந்தது 3 மாத பயிற்சி தர வேண்டும். அதுவும் முறையாக காவலர் பயிற்சிப் பள்ளி, கல்லூரிகளிலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இன்று காலம் மாறியிருக்கிறது, சட்டங்களும் மாறியிருக்கின்றன, மக்களின் கல்வித்தரமும் உயர்ந்திருக்கிறது. இன்னமும் அந்தக் காலப் போலீஸ் போல மக்களை நடத்துவதும், வழக்குகளைக் கையாள்வதும் பயன்தராது" என்றார் அந்த அதிகாரி.

சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது குறித்து காவல்துறைக்கு மட்டுமல்ல, மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுரை கூறியிருக்கிறார் முதல்வர். காரணம், சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் வருவாய்த்துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனால்தான் தாசில்தார், கோட்டாட்சியர், ஆட்சியர்களுக்கு நம்மூரில் மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

"சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் காவல்துறை, வருவாய்த்துறை ஒத்துழைப்பு எப்படியிருக்கிறது?" என்று ஓய்வுபெற்ற கோட்டாட்சியர் ஒருவரிடம் கேட்டபோது, "முன்பு இருந்த வருவாய்த்துறை, காவல்துறை ஒத்துழைப்பு இப்போது இல்லை. ஒரு கலெக்டருக்கும் எஸ்பி-க்கும், ஒரு சப் கலெக்டருக்கும் டிஎஸ்பி-க்கும், ஒரு இன்ஸ்பெக்டருக்கும், தாசில்தாருக்குமான உறவு கிட்டத்தட்ட கணவன், மனைவி உறவு போல. பரஸ்பர புரிதலும், மரியாதையும் கொடுத்தால்தான் ஒத்துழைப்பு இருக்கும். காவல்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து செயல்பட்டால்தான் சமூகப் பிரச்சினைகளை சரியாக கையாள முடியும்.

பல சமயங்களில் வருவாய்த்துறையில் சிலர், தான் ஒரு படி உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்கிறார்கள். பதிலுக்கு காவல்துறையினரும் நானும் சாதாரண ஆள் கிடையாது என்று விரைப்பு காட்டுகிறார்கள். இந்த ஈகோ மாவட்டத்தின் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் சிக்கலை ஏற்படுத்திவிடும். ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு சரியான புரிதல் இருப்பதில்லை. அவர் ஒரு விளம்பரப் பிரியர், அல்லது நேர்மையற்றவர் என்று இன்னொரு அதிகாரிக்குத் தெரியவருகிறபோது, அவரது பரிந்துரைகளை நிறைவேற்ற இவர் தயங்குவார். எனவே, இருதரப்பினரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்தித்துப் பேசுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எப்படி காவல்துறைக்கு உளவுத்துறை தகவல்களைக் கொடுக்கிறதோ, அதேபோல வருவாய்த்துறைக்கு தலையாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நிறைய தகவல்கள், களச்சூழல்கள் கிடைக்கும். இருவரும் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு சூழலுக்கேற்ப முடிவெடுத்தால், தீர்க்க முடியாத பிரச்சினையே கிடையாது" என்றார் அவர்.

பொற்செல்வி ஜெயபிரகாஷ்
பொற்செல்வி ஜெயபிரகாஷ்

ஏற்கெனவே சொன்னபடி, இந்த நோய்க்கு இரண்டு மாத்திரைகள் மட்டும் போதாது. குடும்பமும், சமூகமும் என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் பொற்செல்வி ஜெயபிரகாஷிடம் கேட்டபோது, "வளரிளம் பருவத்துப் பெண்கள், மாணவிகள் வழிதவறிச் செல்வதற்கும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவதற்கும் தற்போதைய குடும்ப, சமூகச் சூழலைத்தான் காரணமாகச் சொல்ல முடியும். இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னும் இதுபோன்ற தவறுகள் நடந்தன என்றாலும், சூழ்நிலை இவ்வளவு மோசமாக இல்லை. தற்போது உள்ளங்கையில் உலகம் என்றாகி விட்டது. நல்லவற்றை விட தேவையற்றவை தான் அதிகம் பார்க்கப்படுகின்றன. சிறு வயதிலேயே பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள், தேவைகள் அதிகரித்துவிட்டன. விவரம் அறியாத பிள்ளைகள் எப்படியோ தலறான வழிகளுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். வன்கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.

சூழல் என்னவோ மாறப் போவதில்லை. மோசமான சூழல்களிலும், அவற்றைச் சரியாகக் கையாளும் பக்குவம், தைரியம் பிள்ளைகளுக்கு வர வேண்டும். முதலில் அவர்களுக்குக் கற்றுத் தரும் பக்குவம் பெற்றவர்களுக்கு வர வேண்டும். இப்போது குடும்பத்துக்கு ஒரு பிள்ளையோ, ரெண்டு பிள்ளையோதான் இருக்கிறார்கள். அவர்களை நம்மாலேயே கண்காணிக்க முடியாவிட்டால், 40 மாணவர்களைக் கையாளும் ஆசிரியர் எப்படிக் கண்காணிக்க முடியும், 30 ஆயிரம் மக்களைக் கையாளும் காவல்துறை எப்படி கண்காணிக்க முடியும்?

எல்லாப் பெற்றோர்களுக்கும் நம் பிள்ளைகள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. சரியான கண்காணிப்பும், அரவணைப்பும் அவசியம். ஊடகங்களும் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்" என்றார் அவர்.

ஆம், வீடு சரியாக இருந்தால்தான் நாடும் நன்றாக இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in