அதிர்ச்சி... காவல் துறை அதிகாரி சுட்டுக்கொலை... மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

 சிங் தம் ஆனந்த்
சிங் தம் ஆனந்த்

மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் பழங்குடி போராளிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மோரே துணைக் கோட்ட காவல் துறை அதிகாரி சிங் தம் ஆனந்த் உயிரிழந்தார்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் போலீஸ் அதிகாரிகள்
துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் போலீஸ் அதிகாரிகள்

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த மே மாதம்  உண்டான மோதல் தொடர்ந்து வன்முறையாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தால்  இதுவரையில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு அமைதி திரும்ப  துணை ராணுவப் படைகளும், மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  மோரே நகரில் கிழக்கு ஷைன் பள்ளி மைதானத்தில் மாநில போலீஸார் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை இணைந்து ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் பணியில் மோரே துணைக் கோட்ட காவல் துறை அதிகாரி (எஸ்டிபிஓ) ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார்.

பழங்குடியினரை நோக்கி துப்பாக்கி சூடு
பழங்குடியினரை நோக்கி துப்பாக்கி சூடு

அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய போராளிகள் குழுவினர் ஆனந்தை நோக்கி  துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரை சக போலீஸ் அதிகாரிகள் மோரோ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காவல் துறை அதிகாரி ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மாநில அமைச்சரவை, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், ரூ.50 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளது.  மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வன்முறைகள் ஏதும் நடக்காத நிலையில் தற்போது காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மீண்டும் அங்கு பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in