’சிசிடிவி ஆதாரம் உள்ளது’: காவல்நிலையம் சென்றவரின் மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் விளக்கம்

அஜித்
அஜித்

குமரிமாவட்டம், குலசேகரம் காவல்நிலையத்திற்கு கையெழுத்துப் போட சென்ற வாலிபர் அஜித் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

உயிர் இழந்த அஜித்தின் தந்தை சசிகுமார், “எனது மகன் அஜித் கடந்த 23-ம் தேதி குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றில் நிபந்தனைக் கையெழுத்துப் போடச் சென்றார். ஆனால் அன்று மதியமே என் வீட்டிற்கு வந்த குலசேகரம் போலீஸார் உங்கள் மகன் எங்கே என்றார்கள். நான் காலையிலேயே ஸ்டேசனுக்கு கையெழுத்துப் போட வந்தானே என்றேன். உடனே, போலீஸ்காரர்கள், உங்கள் மகன் அஜித் அரசமூடு சந்திப்பில் விசம் அருந்தி கிடந்ததாகவும், இப்போது தும்பகோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் சொன்னார்கள், என்னை அவர்களோடு வரச்சொல்லி மிரட்டினார்கள். நான் காவல்துறை வாகனத்தில் வரமாட்டேன் என்றேன். ஆனால் என்னை மிரட்டி நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். நான் தனியாக வாகனம் பிடித்துப் போனேன். அங்கே சென்றதும், என்னை மிரட்டி காகிதங்களில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள்.

என் மகன் வீட்டில் இருந்து காவல் நிலையம் சென்றபோது சந்தோசமாகத்தான் சென்றான். அவனது செல்போன் காவல்நிலையத்தில் இருப்பதாகவும் அதை வாங்கிவருவேன் என்றும் சொல்லிச் சென்றான். காவல் நிலையத்தில் வைத்து அவனைத் தாக்கி போலீஸாரே விஷம் கொடுத்ததாக சந்தேகிக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 23-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மகன் நேற்று இரவு உயிர் இழந்தார்”என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “உயிர் இழந்த அஜித்தின் தந்தை சசிகுமாரின் புகாரின்பேரில், குலசேகரம் காவல்நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தக்கலை டி.எஸ்.பி கணேசன் விசாரணை செய்துவருகிறார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் கடந்த 16-ம் தேதி, அஜித் குடிபோதையில் தன் பக்கத்துவீட்டுக்காரர் சார்லஸ் என்பவரிடம் குடிபோதையில் தகராறு செய்து, கல்லால் காயப்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகி இருந்தார். இந்த வழக்கில் குலசேகரம் காவல்நிலையத்தில் 15 நாள்களுக்கு நிபந்தனை கையெழுத்துப் போடவேண்டும் என ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

23-ம் தேதி, மதியம் 2 மணிக்கு குலசேகரம் காவல்நிலைய வாசலுக்கு வந்த அஜித், தன் செல்போன் காவல்நிலையத்தில் இருப்பதாகவும், அதைத் தன்னிடம் தருமாறும் கேட்டார். காவல் நிலையத்தில் செல்போன் எதுவும் இல்லை என காவலர் கூறியிருந்தார். பின்னர் காவல்நிலையத்திலிருந்து வெளியே சென்ற அஜித், சிறிது நேரம் கழித்து காவல்நிலைய வாசற்கதவின் வெளியே வந்து தான் வெளியில் சென்று விஷமருந்திவிட்டு வந்திருப்பதாகக் கூறி தன் கையில் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் கவரிலிருந்த பொருளை எடுத்து மீண்டும் சாப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த காவலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமாகவே, காவல்நிலையத்தின் வெளியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் ஒரு தனியார் ஜூப்பில் அழைத்துப் போய் சிகிச்சைக்கு சேர்த்தார். இந்த நிகழ்வுகள் காவல்நிலையத்தின் வெளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in