கடத்தல் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது: திருப்பூரில் நடந்தது என்ன?

கடத்தல் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது: திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூரில் அதிமுக பிரமுகரை கடத்த முயன்ற வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(45) திருப்பூர் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை செயலாளராக இருக்கும் இவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்திவருகிறார். இவரது மனைவி சங்கீதா(40) திருப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். இவர்களது வீட்டிற்கு நேற்றுமாலை வந்த 4 பேர் தங்களை காவலர்கள் என அறிமுகம் செய்து கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என சந்திரசேகரை அழைத்தனர். சந்திரசேகர் சந்தேகம் அடைந்தார். அப்போது காவல் ஆய்வாளரான அன்பழகன்(52) தான் திருப்பூர் மாநகர காவல்நிலையத்தில் இருந்து வருவதாகச் சொன்னார். காரில் ஏறப் போன சந்திரசேகர், காருக்குள் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரெத்தினராஜ் என்னும் மளிகைக்கடைக்காரர் இருப்பதைப் பார்த்தார். இதனால் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் காரில் ஏறாமல் தப்பி ஓடினார்.

இதனிடையே சந்திரசேகரின் மனைவி சங்கீதா, தன் தோட்டப் பணியாளர்களின் உதவியோடு காரில் இருந்தவர்களைப் பிடித்து பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அன்பழகன், சென்னை தலைமை செயலகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் எனத் தெரியவந்தது. அவரோடு உடன் வந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன்(45), கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த மேகலா, ரெத்தினராஜ் ஆகியோர் எனத் தெரியவந்தது. மளிகைக்கடைக்காரர் ரெத்தினராஜூக்கும், அதிமுக பிரமுகர் சந்திரசேகருக்கும் இடையே பணம் தொடர்பாக கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்தது. அதில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடத்தல் வழக்கில் ஆய்வாளரே கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in