
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜகவினர் 5 பேர் மீது கோவை துடியலூர் போலீஸார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில் இந்து அமைப்பினர் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதல் கட்டமாக 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. ஊர்வலம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இருப்பினும் துடியலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்தும், அனுமதியின்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல்துறையினர் பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து துடியலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை 2ம் கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்டம் முழுவதும் கரைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.