கல்லூரி மாணவர் கொலை: பின்னணியில் 10-ம் வகுப்பு மாணவிகள் இருவர்!

ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டியவரை, ஆள்வைத்துக் கொன்றதாகத் தகவல்
கல்லூரி மாணவர் கொலை: பின்னணியில் 10-ம் வகுப்பு மாணவிகள் இருவர்!

திருவள்ளூர் கல்லூரி மாணவர் கொலையின் பின்னணியில், 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஈச்சங்காடு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பாக, சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் தோண்டப்பட்டதில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

தொடர்ந்து இறந்த இளைஞரின் அடையாளங்கள் அடிப்படையிலும், சம்பவ இடத்தின் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் குறித்தும் சுற்றுவட்டாரத்தில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர். அருகிலுள்ள சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் 5 பேர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைக் கடந்து சென்றது தொடர்பாக துப்பு துலக்கினர். வாகனத்தின் பதிவு எண் மூலமாக சோழவரம் அசோக் என்ற நபர் பிடிபட்டார்.

இதன் மூலம் கொல்லப்பட்ட நபர், செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரி மாணவரான பிரேம்குமார், வண்டலூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் இருவருடன் பழகி வந்துள்ளார். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, மாணவிகளை தவறாகப் படமெடுத்ததுடன் அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினாராம். அவ்வாறு செய்யாதிருக்க, பணம் உட்பட பல்வேறு வகைகளில் தனக்கு ஆதாயம் செய்ய வேண்டும் என்று 2 மாணவிகளையும் பிரேம்குமார் கட்டாயப்படுத்தினாராம்.

இதற்கிடையே இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமான சோழவாரம் அசோக்கிடம், மாணவிகள் இருவரும் தங்களை பிரேம்குமார் மிரட்டுவது குறித்து தெரிவித்துள்ளனர். தனது நண்பர்கள் இருவருடன் இது தொடர்பாக ஆலோசித்த அசோக், ஒரு திட்டம் தீட்டி மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்படி செங்குன்றத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி பிரேம்குமாருக்கு 2 மாணவிகளும் அன்றைய தினம் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரேம்குமார் அங்கே வந்ததும் மறைந்திருந்த அசோக் மற்றும் நண்பர்கள் இருவர், மாணவிகள் முன்னிலையில் பிரேம்குமாரை மிரட்டி உள்ளனர். இதில் மோதல் வலுத்து ஒருகட்டத்தில் அசோக்கும் அவரது நண்பர்களும் பிரேம்குமாரை வெட்டிக் கொன்றுள்ளனர்.போலீஸாரிடம் அசோக் தெரிவித்துள்ள இந்த தகவல்களின் அடிப்படையில், மாணவிகள் இருவரையும் போலீஸார் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவந்துள்ளனர். பிரேம்குமார் கொலையில் அசோக்குடன் சேர்ந்து ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in