விஜிலென்ஸ் அதிகாரி போல் நடித்து 3-வது திருமணம்: மாணவியுடன் குடும்பம் நடத்தியவர் கைது!

கைது செய்யப்பட்ட அருள்ராயன்
கைது செய்யப்பட்ட அருள்ராயன்

விஜிலென்ஸ் அதிகாரி என்று கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றி 3-வது திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (27) என்ற பெண் 2017-ம் ஆண்டு ரயிலில் பயணித்த போது, ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்ராயன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அருள்ராயன் தன்னை ஒரு விஜிலென்ஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

நட்பாக இருவரும் பழகிவந்த நிலையில், பின்னர் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மதுரையில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அருள்ராயனிடம் காயத்ரி வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் அருள்ராயன் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்துள்ளார். இதுவே நாட்கள் ஆக ஆக இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. எனவே, காயத்ரியை சமாதானம் செய்ய அவரது சொந்த ஊரான பட்டாகுறிச்சியில் அருள்ராயன் குடும்பம் நடத்தி உள்ளார்.

அப்போது காயத்ரி குடும்பத்தாருக்கு அருள்ராயன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரது சொந்த ஊரான சுந்தரநாச்சியாபுரம் சென்று விசாரித்து உள்ளனர். அப்போது அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகிவிட்டதாக ஊர் மக்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் விஜிலென்ஸ் அதிகாரி இல்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து அருள்ராயன் மீது பண மோசடி உள்ளிட்ட புகார்களை காயத்ரியின் குடும்பத்தினர் அளித்தனர். புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல்துறையினர் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

அப்போது, அருள்ராயன், காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அருள்ராயனை நேற்று கைது செய்தனர். கல்லூரி மாணவியை ஏமாற்றி 3-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in