மனைவியுடன் தகராறு... 15 கிமீ தூரத்தில் குழந்தையை விட்டுச்சென்ற தந்தை; பாதுகாத்த 10 வயது சிறுவன்

3 வயது சிறுவனை பாதுகாத்து வைத்திருந்த கோகுல் (10)க்கு போலீஸார் பாராட்டு
3 வயது சிறுவனை பாதுகாத்து வைத்திருந்த கோகுல் (10)க்கு போலீஸார் பாராட்டு

சின்னசேலம் அருகே சாலையில் தந்தை விட்டுச் சென்ற 3 வயது சிறுவனை, 10 வயது சிறுவனின் உதவியுடன் மீட்டு பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை (38). இவர் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சின்னத்திரை தனது 3 வயது மகன் முகேஷை, இருசக்கர வாகனத்தில் அமர வைத்து கொண்டு, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னசேலம் விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோயில் பகுதியில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. தந்தை விட்டு சென்ற நிலையில் புதிய இடம் என்பதால் அழுது கொண்டிருந்த சிறுவனை, அதே தெருவில் வசிக்கும் கோகுல் (10) என்ற சிறுவன் தன் அரவணைப்பில் அழைத்துச் சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சிறுவன் முகேஷுடன் சிறுவன் கோகுல்
சிறுவன் முகேஷுடன் சிறுவன் கோகுல்

இது குறித்த தகவல் அறிந்த சின்ன சேலம் உதவி ஆய்வாளர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டு உள்ளார். ஆனால் குழந்தை தன்னை வைத்திருந்த கோகுலை பிரிய மனம் இல்லாமல் அழுததால், கோகுலுடன் சேர்த்து அந்த குழந்தையையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து குழந்தையை விட்டுச் சென்றது யார் என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிறுவன் கோகுலுக்கு, முகேஷின் தாயார் நன்றி தெரிவித்த போது
சிறுவன் கோகுலுக்கு, முகேஷின் தாயார் நன்றி தெரிவித்த போது

இந்நிலையில் சின்னதுரையின் மனைவி யசோதா, தனது குழந்தையை காணவில்லை என்று கணவரிடம் கேட்டபோது, சிறுவனை 15 கிலோமீட்டர் தொலைவில் விட்டு வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, சிறுவனின் பெற்றோரும், சின்ன சேலத்தில் குழந்தையை தேடி வந்த தகவலை அறிந்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அறிவுரை கூறி குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை பாதுகாத்து வைத்திருந்த சிறுவன் கோகுலையும் போலீஸார் பாராட்டி பரிசுகள் வழங்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோருடன் சிறுவன் முகேஷ்
பெற்றோருடன் சிறுவன் முகேஷ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in