போக்சோ சட்டம் குற்றங்களைத் தடுக்கிறதா?

போக்சோ சட்டம் குற்றங்களைத் தடுக்கிறதா?

பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர், வீடியோ படம் காட்டிய தலைமை ஆசிரியர், சிறுவர்களிடம் தவறாக நடந்த துணை வார்டன் என்ற செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்றாகி விட்டது. இதற்கு அடுத்த கட்டமாக, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்க போக்சோ சட்டம் 2012, நவம்பர் 12-ம் தேதி அமலானது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், பாலியல் சீண்டலின் மூலமாக மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு போக்சோ சட்டம் பாதுகாப்பு அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் போக்சோ குற்ற வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 69 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2021-ம் ஆண்டு 77 வழக்குகளாக அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 2016-ம் ஆண்டில் 29 ஆக இருந்த போக்சோ வழக்குகள், 2021-ம் ஆண்டில் 89 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான போக்சோ வழக்குகளில் ஆசிரியர்கள் குற்றவாளிகளாவது சமூகத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை பாலியல் தொந்தரவு அல்லது வல்லுறவுக்கு உட்படுத்தும் குற்றத்திற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று போக்சோ சட்டம் கூறுகிறது. மேலும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரி, சிறை ஊழியர், வார்டன் ஆக இருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், இந்த சட்டத்தால் தமிழகத்தில் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளார்கள் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.

வழக்கறிஞர் செல்வகோமதி
வழக்கறிஞர் செல்வகோமதி

இதுகுறித்து வழக்கறிஞர் செல்வகோமதி கூறுகையில், "பாலியல் குற்றங்களில் ஆசிரியர்கள் அதிகம் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த புரிதலை தமிழக அரசு உணர்த்த வேண்டிய தேவையிருக்கிறது. ஒரு நாளில் எட்டு மணி நேரத்தை குழந்தைகள் பள்ளியில் தான் செலவழிக்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்து ஆசிரியர்களுக்கும் உண்டு. முன்பு இப்படியான விஷயங்களை மூடி மறைக்கப் பார்ப்பார்கள். ஆனால், போக்சோ சட்டம் குறித்த புரிதல் மக்களிடம் ஏற்பட்டுள்ளதால் புகார் அளிக்கிறார்கள். ஆனால், அதற்குரிய காலத்தில் தண்டனை வழங்கப்படுவதில்லை. இதனால் புகார்தாரர்களே பிறழ் சாட்சிகளாக மாறுகின்றனர். ஏனெனில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பள்ளிப்பாடங்களில் தீண்டாமை ஒரு குற்றம் என வாசகங்கள் அச்சடிக்கப்பட்டது போல, போக்சோ குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அச்சடிக்கப்பட வேண்டும். மேலும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் இடம் பெற வேண்டும்" என்று கூறினார்.

பொ.சீனிவாசன்
பொ.சீனிவாசன்

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் பொ.சீனிவாசன் கூறுகையில், "பள்ளிக்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மிருகங்களுக்குச் சமமானவர்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். ஆனால், குரு ஸ்தானத்தில் உள்ள ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகள் போல நடத்த வேண்டிய சிறார்களிடம் தவறாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது. எனவே, போக்சோ சட்டத்தை கடுமையாக அமலாக்க வேண்டும். புகாருக்கு உள்ளாகும் குற்றவாளிகள் மீதான தண்டனையை உரிய காலத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in