மூன்று பேரின் உயிரைப்பறித்த விஷவாயு: நள்ளிரவில் நடந்தது என்ன?

மூன்று பேரின் உயிரைப்பறித்த விஷவாயு: நள்ளிரவில் நடந்தது என்ன?
கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து உடல் மீட்கப்படுகிறது.

மதுரையில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெரிய தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அதன் பின் மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த கழிவுநீர் தொட்டியில் உள்ள மின் மோட்டார் கடந்த 2 நாட்களாக இயங்கவில்லை. இதனால் மாநகராட்சி சார்பில் இந்தப் பணியை ஒப்பந்தத்திற்கு எடுத்த தனியார் நிறுவனம் சார்பில் மோட்டாரை பழுதுபார்க்கும் பணியில் மூன்று மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று இரவு இந்த பணியில் ஈடுபட்டிருந்த மாடக்குளத்தை சேர்ந்த சிவக்குமார், மின்மோட்டாரை பழுது பார்த்தார் அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி அவர் 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவருடன் வந்த மாடக்குளம் சரவணன், அலங்காநல்லூர் லட்சுமணன் ஆகியோர் அவரைக் காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். சிவக்குமாரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள்.
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள்.

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். உடனடியாக திடீர்நகர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். கழிவுநீர் தொட்டிற்குள் விஷவாயு அபாயம் இருந்தால் பாதுகாப்பு உபகரணங்களுடன் 30 அடி ஆழத்திற்குள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மூவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், விஷவாயு தாக்கி அவர்கள் மூவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூவரின் உடல்களையும் மீட்டனர். எஸ்.எஸ்.காலனி போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், "குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்கக்கூடாது என மாநகராட்சியிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால், அதைக் கேட்காமல் கழிவுநீர் தொட்டி வைத்து இங்கிருந்து பல்வேறு பகுதி கழிவுநீர் வெளியேற்றுகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதன் காரணமாக, இரவில் தான் எந்த வேலையும் செய்வார்கள். கழிவுநீர் தொட்டியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே மூவரின் உயிரிழப்புக்கு காரணம்" என்று கூறினர்.

சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், துணைமேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சி ஒப்பந்த நிறுவன உரிமையாளர் விஜயானந்த், ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரவு நேரத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததாலும், உரிய மேற்பார்வை இன்றியும் பணி செய்ததாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக மதுரை மாநகராட்சி இளநிலை பொறியாளர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் போலீஸார். இவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விஷ வாயுவால் உயிரிழந்த மூன்று மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் உடல்கள், மதுரை அரசு மருத்துவமனையின் பிரேதபரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தகவலறிந்த மூவரின் குடும்பத்தினர், உறவினர்கள் ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் நள்ளிரவில் மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.