‘உன் அக்காவை கடத்தி விட்டேன்… பணம் கொடு’: ஆண் குரலில் தம்பியை மிரட்டிய சகோதரி!

‘உன் அக்காவை கடத்தி விட்டேன்… பணம் கொடு’: ஆண் குரலில் தம்பியை மிரட்டிய சகோதரி!

தன் சகோதரனிடம் பணம் பறிப்பதற்காக போனில் ஆண் குரலில் பேசி மிரட்டிய அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள மெஹ்ராலி காவல் நிலையத்தில் வாலிபர் புகார் அளித்தார். அதில், மர்மநபர்கள் தனது சகோதரியின் தொலைபேசி எண்ணில் இருந்து பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக புகார் செய்தார். அத்துடன் கட்டி வைக்கப்பட்ட தனது சகோதரி படத்தை மர்மநபர்கள் அனுப்பியதாக போலீஸாரிடம் கூறினார்.

இதையடுத்து பெண் கடத்தப்பட்ட வீட்டின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அத்துடன் கடத்தப்பட்ட பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் வாட்ஸ் அப்பில் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து தொழில்நுட்ப உதவியின் மூலம் வாட்ஸ்அப் எண்ணைக் கொண்டு அந்த பெண் எங்கு இருக்கிறார் என்று போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் ஆக்ராவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆக்ராவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் மற்றும் விடுதிகளை போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் மார்க்கெட்டில் உள்ள ஒரு ஹோட்டலை சோதனை செய்தபோது அந்த பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவலைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நிதி நெருக்கடி காரணமாக தனது சகோதரரிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவ்வாறு கடத்தல் நாடகமாடியதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை தானே கைகளைக் கட்டிக்கொண்டு, போனில் உள்ள செயலி மூலம் தன் குரலை ஆண் குரலாக மாற்றி சகோதரரை மிரட்டி பணம் கேட்டதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து மெஹ்ராலி காவல்நிலைய போலீஸார் கூறுகையில், "38 வயதான அந்த பெண் ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். மிரட்டி பணம் பறித்ததற்கான சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in