பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி சிறையில் அடைப்பு: ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு

ரவுடி கருக்கா வினோத்
ரவுடி கருக்கா வினோத்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேர்ந்தவர் ரவுடி கருக்கா வினோத்(42). இவர் மீது கொலை மற்றும் கொள்ளை, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ரவுடி வினோத் சென்னை கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் அருகே பெட்ரோல் குண்டை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதில்லை.

பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி கருக்கா வினோத்தை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்து கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நீட் தேர்வுக்கு ரத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது 5 பிரிவின் கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி

சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற 9வது அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவின் பேரில் கருக்கா வினோத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவு 1.30 மணியளவில் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறை அதிகாரிகள் நள்ளிரவு கைதியை ஏற்க முடியாது என்றும் காலை அழைத்து வருமாறு தெரிவித்ததால் செய்வதறியாது திகைத்து நின்ற போலீஸார் இன்று காலை 6.15 ரவுடி கருக்கா வினோத்தை சிறையில் அடைத்தனர்.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக ஆளுநர் மாளிகை வெளியே ஒரு உதவி ஆணையர் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 15 காவலர்கள் என கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வரவுள்ள நிலையில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in