
கர்நாடகாவில் விபரீத விளையாட்டால் போட்டிப்போட்டு மது குடித்த நபர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா சிகரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மேகவுடா (60). தொழிலாளியான இவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான தேவராஜுடன், இருவருக்கும் இடையே யார் அதிகமாக மது குடிப்பது என்பது தொடர்பாக போட்டி எழுந்துள்ளது.
அப்போது திம்மேகவுடா அரை மணி நேரத்தில் 90 மில்லி அளவிலான 10 மது பாக்கெட்டுகளை குடித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு தேவராஜு நானும் அதே அளவு மது குடித்துவிடுவேன் என சவால் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் அரை மணி நேரத்தில் தலா 900 மில்லி லிட்டர் மதுவை குடிக்க வேண்டும் என்ற விபரீத சவால் விளையாட்டுக்கு ஒப்புக்கொண்டனர்.
இந்தப் போட்டிக்கு அதே பகுதியில் சட்டவிரோதமாக மது விற்று வரும் கிருஷ்ண கவுடா என்பவர், 90 மில்லி எடை கொண்ட 10 மது பாக்கெட்டுகளை கொடுத்துள்ளார். இதனால் இருவரும் போட்டிப்போட்டு மது பாக்கெட்டுகளை குடித்துள்ளனர். சவாலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்த திம்மேகவுடா அவசரம் அவசரமாக மதுவை குடித்துள்ளார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறியதுடன் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே அங்கிருந்து தேவராஜும், கிருஷ்ணகவுடாவும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சூழலில் திம்மேகவுடா பஸ் நிறுத்தத்திலேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரை வீட்டில் கொண்டுவந்து விட்டனர்.
ஆனால் அவரது குடும்பத்தினர் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே திம்மேகவுடா உடல்நலிவுற்று இறந்துபோனார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஒலேநரசிப்புரா போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்துபோன திம்மேகவுடா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒலேநரசிப்புரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், திம்மேகவுடா போட்டிப்போட்டு மது குடித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திம்மேகவுடா குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தேவராஜு, கிருஷ்ணகவுடா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான அவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.