மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

குடியாத்தத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
குடியாத்தத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டைப் பகுதியில் இயங்கி வரும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். ராமன் என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக இந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் அவ்வப்போது தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பல மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு பயந்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அறிவியல் ஆசிரியர் ராமன் மீது புகார் அளித்தனர். இதன் காரணமாக அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் விடுப்பில் செல்ல அறிவுறுத்தியுள்ளது.

இதனை அறிந்த பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை முடிந்து செல்லும் போது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் வாகனத்தையும் முற்றுகையிட்டனர். இதனையடுத்து, ஆசிரியர் ராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்த பின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் ராமனை வேலூர் மாவட்டம் பொன்னை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in