மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர் கொடுக்கும் நெருக்கடிதான் காரணம்... உச்ச நீதிமன்றம் அதிரடி!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளுக்காக நூற்றுக்கணக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இன்னொரு பக்கம், இங்கு படிக்கும் மாணவர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், புற்றீசல் போல அதிகரித்து வரும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரி மும்பையைச் சேர்ந்த டாக்டர் அனிருதா நாராயண் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் என்.பட்டி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் மோகினி பிரியா ஆஜரானார்.

மனுதாரர் தனது மனுவில், “லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நுழைவுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்காக ஆரம்பிக்கப்படும் எண்ணிக்கையில் அடங்காத கோச்சிங் சென்டர்களை ஒழுங்குபடுத்த தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த கோச்சிங் சென்டர்களில் படித்த பல மாணவர்கள் சமீப காலத்தில் அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர்.

 தற்கொலை
தற்கொலை

மாணவர்கள் இது போன்ற கோச்சிங் தொழிற்சாலைகளில் கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர். வீட்டை விட்டு வந்து ஹாஸ்டலில் தங்கும் மாணவர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் கோச்சிங் கிளாஸ்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கின்றன. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்கோச்சிங் கிளாஸ்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ''நாம் அனைவரும் பயிற்சி வகுப்புகள் வேண்டாம் என்று நினைக்கிறோம். ஆனால் பள்ளிகளின் நிலையையும் பார்க்கவேண்டியிருக்கிறது. கடுமையான போட்டி இருப்பதால் மாணவர்களும் வேறு வழியில்லாமல் பயிற்சி வகுப்புகள் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. அனைத்திற்கும் பெற்றோரின் நெருக்கடிதான் காரணம். பெற்றோர்கள்தான் அவர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கின்றனர். அப்படி இருக்கும்போது இதில் எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும்?. இதில் எங்களால் எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இவ்விவகாரத்தில் மத்திய அரசை தான் மனுதாரர் அனுகவேண்டும்'' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தற்கொலை
தற்கொலை

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பு, ட்யூஷன், போட்டித் தேர்வு, விளையாட்டுப் போட்டி என ஒரே நேரத்தில் எத்தனையோ வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலர் பெற்றோர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in