சோகம்... பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

சரவணன், கீதா
சரவணன், கீதா

தங்கள் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த அவரது பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகோனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்( 50). இவரது மனைவி கீதா(45). இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27). வியாபாரி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான தீபிகா (23) என்பவரும் காதலித்து வந்தனர். தீபிகா ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதனைப் பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து பழகி வந்தனர். இதனைத்தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால்  ரஞ்சித்குமாரின் பெற்றோர் சரவணன், கீதா ஆகியோர் கடும் மனவேதனை அடைந்தனர். தங்களது பேச்சைக் கேட்காமல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை நினைத்து வருந்திய அவர்கள் நேற்று காலை 10 மணி அளவில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கணவன், மனைவி இருவரையும் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகன் காதல் திருமணம் செய்து கொண்டதை ஏற்று கொள்ள முடியாமல் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in