
கடலூர் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி கற்பகம். இவர் வடபாதி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
கற்பகம் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கடலூர் மாவட்டர் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜாங்கம், எஸ்எஸ்ஐ மணிமேகலை ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீஸார் அதிரடியாக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 20க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய பாக்கெட் பறிமுதல் செய்ததோடு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகத்தையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஊராட்சி மன்ற தலைவராக மக்கள் பணி செய்யாமல் சாராயம் விற்று கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதேபோல் இரண்டு மாதத்திற்கு முன்பு இவரது கணவர் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸாரால் கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.